நெல்லை மார்க்கெட்டுகளில் கத்தரிக்காய் கிலோ ரூ. 100-க்கு விற்பனை

நெல்லை மார்க்கெட்டுகளில் கத்தரிக்காய் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து ரூ. 76 வரை விற்கப்பட்டது. சில்லறை வியாபாரக் கடைகளில் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லையில் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டுக்கு தென்காசி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் தக்காளி, கத்தரிக்காய், உருளை, பல்லாரி, மிளகாய் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் வந்து சேரும்.

இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்று கடைகள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்வார்கள். இது தவிர டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் களிலும் தினந்தோறும் காய்கறி விற்பனை மும்முரமாக நடைபெறும்.

பொங்கல் பண்டிகையை யொட்டி வழக்கம் போல் இந்த ஆண்டும் காய்கறிகள் விலை உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் படிப்படியாக காய்கறிகளின் விலை குறைய தொடங்கியது.

கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.28-க்கு விற்பனையானது. வெள்ளை நிற கத்தரிக்காய்  ரூ.25-க்கும், கலர் கத்தரிக்காய் ரூ.20-க்கும் விற்கப்பட்டது. முருங்கைகாய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.

அதன் பின்னர் தக்காளி விலை மெல்ல மெல்ல குறைந்தது. அதே நேரத்தில் கத்தரிக்காய் விலை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 27-ந்தேதி வெள்ளை நிற கத்தரிக்காய் ரூ.44, கலர் கத்தரிக்காய் ரூ.30-க்கும் விற்கப்பட்டது.

கடந்த 30-ந்தேதி ரூ.52-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் இன்று ரூ.76 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.100 வரை விற்கப்படுகிறது. அதே நேரத்தில் தக்காளி கிலோ ரூ.15 முதல் ரூ.17 வரை மட்டுமே விற்பனையாகிறது.

 பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு வந்து சேர்வதால் தக்காளி விலை மிகவும் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

முருங்கைக்காய் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை இன்று விற்பனை செய்யப்படு கிறது. மேலும் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் கிலோவுக்கு கேரட் ரூ.-95, முட்டை கோஸ்-46, வெண்டை- 24, புடலை- 14, அவரை-45, பாகற்காய்-70, பச்சை மிளகாய்- 70, பல்லாரி- 40 சின்ன வெங்காயம்- 60, புதினா-40, மல்லி இலை-25.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com