கோவையில் வெவ்வேறு விபத்து இளம்பெண் உள்பட 3 பேர் பலி

திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சோணு கீழே விழுந்தார் பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் வெவ்வேறு விபத்து இளம்பெண் உள்பட 3 பேர் பலி
Published on

கோவை,

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோழிபதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கவுரி (வயது32).

சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அரவிந்குமார் (20) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் பாலக்காடு - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சோணு (23). காளிபட்டியில் உள்ள கயிறு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சோணு பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சர்க்கார் சாமகுளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (65). சம்பவத்தன்று இவர் தனது சைக்கிளில் கோட்டைபாளையம் - செட்டிப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com