

திருச்செந்தூர்:
தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிர்புறம் அமைந்துள்ள திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் சுடலை, நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் துணைத் தலைவர் செங்குழி ரமேஷ் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் குடந்தை ராம-கிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா எம்.எல்.ஏ., மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
இந்துக்களுக்கு தி.மு.க. எதிரான கட்சி அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒரு கட்சியாகும். திருச்செந்தூரில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு திரிசுதந்திர பிராமணர்கள் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமோ அத்தனை உதவிகளும் செய்து தரப்படும்.
கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இந்த அரசு மீட்டு வருகிறது. திருச்செந்தூரில் ரூ. 250 கோடி நிதியில் திருப்பதிக்கு இணையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் வசதிக்காக வீரபாண்டிய பட்டணத்தில் இருந்து நேரடியாக கோவிலுக்கு ஒரு சாலையும், அய்யா வைகுண்டர் அவதார பதியில் இருந்து ஒரு சாலையும் போடப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். இன்னும் ஒரு வருடத்தில் திருச்செந்தூர் கோவில் திருப்பதிக்கு இணையாக மாற்றித் தரப்படும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. 3 லட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சி டெபாசிட் இழக்க வேண்டும். அந்த அளவுக்கு நாம் சிறப்பாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, பூபதி, ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், அவைத்தலைவர் அருணாச்சலம், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுதாகர் நன்றி கூறினார்.