

திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ரமேஷ்வரன் (வயது27).
இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அவர் குரும்பூர் பஸ் நிலையம் பின்புறம் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். மேலும் கோழி, புறா போன்றவற்றையும் வாங்கி விற்பனையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய ‘பேஸ்புக்‘ நண்பரான அடைக்கலாபுரம் சுனாமி நகரை சேர்ந்த சாரதி என்பவர் தன்னிடம் கோழிகள் விற்பனைக்கு இருப்பதாகவும், வந்து வாங்கி செல்லுமாறும் ரமேஷ்வரனை அழைத்துள் ளார்.
இதை நம்பி ரமேஷ்வரன் அடைக்கலா புரம் ரெயில்வே கேட் அருகில் வந்துள்ளார். உடனே அவரை சாரதி, ராணிமகராஜபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் அங்கே நின்று கொண்டிருந்தார்.
அங்கு 2 பேரும் சேர்ந்து ரமேஷ்வரனை கம்பால் தாக்கியுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வனுடன் அவரது கூட்டாளிகளான முறப்பநாடு பகுதியை சேர்ந்த அய்யப்பன், வல்லநாட்டை சேர்ந்த தம்பான் ஆகியோரும் சேர்ந்து ரமேஷ்வரனை தாக்கி உள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்த 2 பவுன் தங்க செயின், ரூ.4 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் காயமடைந்த ரமேஷ்வரன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யப்பன், தம்பான், சாரதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய தமிழ்ச்செல்வனை தேடி வருகின்றனர்.