

ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் நின்றிருந்த பனைமரம் மற்றும் தென்னை மரங்களுக்கு இடையில் யாரோ பறக்கவிட்ட பட்டம் அறுந்து அதன் நூல் சிக்கி இருந்தது.
அவ்வழியாக பறந்து வந்த காகம் ஒன்றின் இறகு அந்த நூலில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்து விடுபட முடியாத காகம் உயிருக்கு போராடியது.
காலையிலிருந்து சுமார் 5 மணி நேரம் அந்த காகம் நூலில் தொங்கியபடி அந்தரத்தில் தவித்துக் கொண்டிருந்தது.
இதனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்த போதிலும் அந்த காகம் 30 அடி உயரத்திற்கு மேல் நூலில் மாட்டி தொங்கியதால் அதனை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை.
இதையறிந்த சமூக ஆர்வலரான ஆறுமுகநேரி லட்சுமி மாநகரத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் அவரது நண்பர்களான முத்து, சின்னதம்பி, சாமி ஆகியோருடன் அங்கு வந்தார்.
அவர்கள் அங்கிருந்த கட்டிடம் ஒன்றின் மீது ஏறி, கம்பு மற்றும் கயிற்றின் உதவிகொண்டு நூலில் சிக்கி தொங்கிய காகத்தை மீட்டு பறக்க விட்டனர்.
ஆபத்தில் சிக்கி இருந்த காகத்தின் மீது பரிவு கொண்டு இந்த செயலில் ஈடுபட்ட தங்கதுரை மற்றும் அவரது நண்பர்களை பலரும் பாராட்டினர்.