

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முடிவைதானேந்தல் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 61). இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 23 சென்ட் நிலம் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இந்த நிலத்தை ஸ்ரீவைகுண்டம் அணியாபரணநல்லூர் மீனாட்சிப்பட்டியை சேர்ந்த அருணாசங்கர் என்பவர் தனது நண்பரான நில புரோக்கர் உதவியுடன் போலியான வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக நிலத்தை கிரையம் செய்துள்ளதாக ஆதிநாராயணன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் சம்பத்துக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், சரவண சங்கர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை நடத்தி கடந்த ஜனவரி 13-ந் தேதி வழக்குப்பதிவு செய்து அருணாசங்கரை தேடி வந்தனர்.
இந்நிலையில் பத்மநாபமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.