

செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் தம்பிராட்டி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரிய மாட்டு வண்டிகள், சிறிய மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பந்தயம் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் இன்று நடந்தது.
இதில் 7 பெரிய மாட்டு வண்டிகளும், 22 சிறிய மாட்டு வண்டிகளும், 10 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. வல்லநாட்டில் இருந்து ஆழ்வார்கற்குளம் வரை மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இதில் பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் முதல் பரிசை வல்லநாடு இசக்கியம்மாள் வண்டியும், 2-வது பரிசை சீவலப்பேரி துர்காம்பிகா வண்டியும், மூன்றாவது பரிசை வள்ளியூர் ஆனந்த் வண்டியும் பெற்றது.
அதே போல் சிறிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் முதல் பரிசை மருகால்குறிச்சி சுப்பம்மாள் வண்டியும், இரண்டாம் பரிசை சீவலப்பேரி துர்காம்பிகா வண்டியும், மூன்றாவது பரிசை வல்லநாடு சிவபார்வதி வண்டியும் பெற்றது.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வல்லநாட்டில் நடந்த இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து பார்வையிட்டனர்.