

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் புதுவேத கோவில் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவன். இவர் தற்பொழுது குடும்பத்தோடு பெங்களூரில் வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான வீடு புதுவேத கோவில் தெருவில் பூட்டியே உள்ளது. இன்று அதிகாலை அக்கம் பக்கம் உள்ளவர்கள் சதாசிவன் வீட்டை பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உடனடியாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டு பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும், பொருட்களும் திருட்டு போனது தெரிய வந்துள்ளது.
இதேபோல் சதாசிவன் வீட்டுக்கு எதிரே உள்ள சலவைத் தொழிலாளி ஸ்ரீராமன் என்பவரது வீட்டு சுவர் உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கே எவ்வித பொருள் இல்லாததால் திருட வந்த மர்ம நபர்கள்அப்படியே திரும்பி விட்டனர்.
இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை சாத்தான் குளம் போலீசார் தேடி வருகின்றனர்.