

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தாலுகா புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடம் ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்தினை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றி முள்வேலி போட்டு அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் பாலகங்காதரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், விஸ்வநாதன், சத்யராஜ், இசக்கி ராஜ் உள்பட வருவாய் துறையினர் விரைந்து சென்று காவல்துறை பாதுகாப்போடு ஆக்கிரமித்துள்ள முள்வேலி போட்டு அடைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை மீட்டெடுத்தனர். நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
மேலும் அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை சார்பில் அந்நிலத்தில் அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது.