

கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 7&வது தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50).
பால் வியாபாரி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் மணி நேற்று மாலை தனது தொழுவத்திற்கு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பேச்சியம்மாள் கண் முன்னே மர்மநபர்கள் திடீரென்று மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதைப்பார்த்த அவரது மனைவி கதறித் துடித்தார்.
சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில் மேற்கு இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்&இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கொலை செய்தவர்கள் யார்? எதனால் அவர் கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சில தகவல்கள் கிடைத்தன.
மணியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை ஆகும். அங்கு கடந்த 2010&ம் ஆண்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மணியை கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மணி கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே அந்த வாலிபர் கொலைக்கு பழிக்குப்பழியாக மணி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் சந்தேகிக் கிறார்கள். அந்த கோணத்தில் போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.