தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பதவியேற்றார்

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த என். ஜெகன் பெரியசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கமிஷனர் சாருஸ்ரீ முன்னிலையில் பதவியேற்று கொண்டார்.
மேயர் ஜெகனுக்கு செங்கோல் வழங்கப்பட்ட காட்சி. அருகில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் உள்ளனர்.
மேயர் ஜெகனுக்கு செங்கோல் வழங்கப்பட்ட காட்சி. அருகில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் உள்ளனர்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 50 பேர் வெற்றி பெற்றனர். 

அ.தி.மு.க. வினர் 6 பேரும், சுயேட்சைகள் 4 பேரும் வென்றனர். இவர்கள் அனைவரும் பதவியேற்ற நிலையில் இன்று மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. 

மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் என்.பி. ஜெகன் பெரியசாமி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காலை 9 மணிக்கு மேயரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் தொடங்கியது.  

தேர்தல் அதிகாரியும் கமிஷனருமான சாருஸ்ரீ தேர்தலை நடத்தினார். இதில் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 49 கவுன்சிலர்களும், 3 சுயேட்சைகளும் பங்கேற்றனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்களும், தி.மு.க.வை சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலர் மற்றும் ஒரு சுயேட்சையும் தேர்தலில் பங்கேற்கவில்லை. 

இதையடுத்து தி.மு.க. சார்பில் என்.பி. ஜெகன் பெரியசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் தூத்துக்குடி மேயராக ஜெகன் பெரியசாமி  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு கமிஷனர் சாருஸ்ரீ மேயருக்கான அங்கி மற்றும் செங்கோலை வழங்கினார். 

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து  தூத்துக்குடி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமிக்கு கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

முன்னாள் மாவட்ட செயலாளர் என். பெரியசாமியின் மனைவியும் ஜெகன் பெரியசாமியின் தாயுமான எபினேசர் அம்மாள் பங்கேற்று தனது மகனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் உணர்ச்சி பொங்க வாழ்த்து கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com