சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்தியை மாணவர்கள் பார்வையிட்டனர்

சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் சென்று வருகிறது. தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்து. பின்னர் அலங்கார ஊர்தியை ஏராளமான மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
அலங்கார ஊர்தியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்ற போது எடுத்தபடம்.
அலங்கார ஊர்தியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரவேற்ற போது எடுத்தபடம்.
Published on

தூத்துக்குடி:

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை பறைசாற்றும் வகையில் தமிழக அரசால் ‘விடுதலை போரில் தமிழகம்‘ என்ற பெயரில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு அலங்கார ஊர்தி நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தது.

இந்த ஊர்தியில் வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவை உள்ளன.

இந்த அலங்கார ஊர்திக்கு அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இந்த அலங்கார ஊர்தி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகே உள்ள அறிவியல் பூங்கா முன்பு பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த அலங்கார ஊர்தியை நேற்று முன்தினம் முதல் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். நேற்று 2-வது நாளாக மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். காலையில் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கொரோனா விதிமுறையை பின்பற்றி ஊர்தியை கண்டு ரசித்தனர்.

பின்னர் மாலையில் இந்த அலங்கார ஊர்தி பாளை ரோடு வழியாக கோரம்பள்ளத்துக்கு சென்றது. அங்கு கரகாட்டம், மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கார ஊர்தி வந்தவுடன் மக்கள் உற்சாக பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மலர் தூவி வரவேற்பு அளித்தார். பின்னர் அவர் பேசும் போது, சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மாவீரர்களின் வரலாற்றை டெல்லியில் உள்ளவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழக மக்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல, அவர்களின் தியாகங்களை மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்ற வகையில் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் செல்லும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.

 அதன்படி இந்த ஊர்தி இங்கு வந்து உள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களை வரவேற்கும் விதமாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து பொதுமக்கள் மாணவ-மாணவிகள், இளைஞர்கள் அலங்கார ஊர்தியின் அருகே நின்று ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com