

திருவாரூர்:
திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டக் குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் பாலாஜி, மோகன், நடராஜன், ராஜேந்திரன், சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் 9.1.2022 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது. ஜனவரி 14-ந்தேதி பொங்கல் பண்டிகை தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாவாகும்.
இந்த திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான பொதுமக்கள் கடைவீதிக்கு சென்று விழாவிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர். அந்த நேரத்தில் ஊரடங்கு என்பது பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே வருகின்ற 9-ந்தேதி மட்டும் முழு ஊரடங்கு என்பதை மறுபரிசீலனை செய்து, மற்ற நாட்களைப் போல விதிமுறைகளை விதிக்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில்
முழு ஊரடங்கு தாங்கள் அறிவிப்பதில் ஆட்சேபனை கிடையாது.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக முதல்வருக்கு திருவாரூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.