

வருகிற ஏப்ரல் 14-ந்தேதி குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.
அடுத்தமாதம்(ஏப்ரல்) 14-ந்தேதி குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு ஏப்ரல் 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனையும், குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறும்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும்.
லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணிவரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.
லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் தொகையை உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர்,
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து கோவில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.