

திருவாரூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19&ந் தேதி நடைபெறுகிறது. இந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் அச்சமின்றி இடையூறுகளின்றி வாக்களிக்க பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கொரடாச்சேரி பகுதியில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை வகித்தார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பழகன், பயிற்சி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக கருதப்படும் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி, வெண்ணவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட இடங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அணிவகுப்பின் போது, நடைபெற உள்ள கொரடாச்சேரி பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி தங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கேட்டுக் கொண்டார்.