

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நல்லகுமரன்பாளையத்தை சேர்ந்த ரமேஷ். இவரது மகன் பிரவீன்( வயது 23). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். அப்போது, பரமத்திவேலூர் அருகே நன்செய் இடை யாறு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் மீனா( 28 ) என்பவர், கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
இதில், மீனாவுக்கும் பிரவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 8-ந் தேதி திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை வேலகவுண்டன்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள், தங்கள் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு இருப்பதால், பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், காதலன் வயதை விட, காதலியின் வயது அதிகம் என்பதால் பெற்றோர் அவர்களை ஏற்க மறுத்தனர். இருவரும் திருமண வயதில் இருப்பதால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும், மேலும் காதல் ஜோடியை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது எனக் கூறியும் பெற்றோர்களை அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.