ரோட்டில் நடந்து சென்ற வாலிபரை போதையில் வெட்டிகொன்ற ரவுடி- 4 பேருடன் சேர்ந்து அட்டூழியம்

பலத்த காயம் அடைந்த ராஜா உயிருக்கு போராடினார்.சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோட்டில் நடந்து சென்ற வாலிபரை போதையில் வெட்டிகொன்ற ரவுடி- 4 பேருடன் சேர்ந்து அட்டூழியம்
Published on

சென்னை:

சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜா. 39 வயதான இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

எழில்நகர் பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாக அப்பகுதியை சேர்ந்த ரவுடி கோபி மற்றும் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

போதை தலைக்கேறிய நிலையில் ரவுடி கோபியும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் சேர்ந்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ராஜாவிடம் வீண் தகராறு செய்து வம்பிழுத்துள்ளனர். அப்போது அவர்கள் கத்தியால் ராஜாவை தலையில் வெட்டினார்கள். இதில் அலறி துடித்த அவரை கோபியும் அவனது ஆட்களும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜா உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுமக்கள் பிடிக்கச் சென்ற போது ரவுடி கோபி தப்ப முயன்றான். அப்போது கால் இடறி கீழே விழுந்த கோபியின் தலையில் அடிபட்டது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோபியின் கூட்டாளிகளான சத்யா, மகபூப், பாஷா, செல்வம் ஆகிய 4 பேரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களை பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினையும் செய்யாமல் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அப்பாவி வாலிபரான ராஜா ரவுடி கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com