உச்சிப்புளி அருகே வேன் மரத்தில் மோதி டிரைவர் பலி: 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ராமேசுவரம் கோவிலுக்கு சென்றபோது வேன் மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மரத்தில் மோதி வேனின் முன்பகுதி நொறுங்கி இருக்கும் காட்சி
மரத்தில் மோதி வேனின் முன்பகுதி நொறுங்கி இருக்கும் காட்சி
Published on

ராமநாதபுரம்:

தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் தலைமையில் இன்று அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 28 பேர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர்.

தேனி கோவிந்த நகரைச் சேர்ந்த நவநீதன் (46) என்பவர் வேனை ஓட்டினார். இன்று காலை 6 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள மரவெட்டி வலசை பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் இருந்த பனைமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவர் நவநீதன் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் வேனில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com