தஞ்சபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா

தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் பிரசித்தி பெற்ற தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் இந்த கோவில் ஒன்றாகும்.

இக்கோவிலில் சிவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பது தனி சிறப்பாகும். அதுமட்டுமின்றி குபேரன் இலங்கையை ஆட்சி செய்து வந்தபோது தனது செல்வங்களை ராவணனிடம் இழந்ததாக கூறப்படுகிறது.

இழந்த செல்வங்களை மீட்பதற்காக குபேரன் தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும், சிவனின் அருளால் இழந்த செல்வங்களை ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் குபேர யாகம் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், அய்யப்பன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி, சரஸ்வதி, குபேரன், பஞ்சமுக ஆஞ்சநேயர், நவக்கிரகம், அம்மன் ஆகியோருக்கு தனி, தனி சன்னதிகள் உள்ளன. மூலவராக தஞ்சபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். 

இந்த கோவில் கடந்த 2000-&ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பின்னர் கோவிலில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து இன்று குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 

நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் பின்னர் பூர்ணாஹீதி, தீபாரதனை நடைபெற்றது. மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இரவு 7 மணிக்கு நாடி சந்தானம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

இன்று காலை 5.30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகின. காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 7 மணிக்கு பரிவார யாகசாலை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் யாகசாலை நடைபெற்றது. 

இதையடுத்து மகா தீபாராதனையும், யாத்திராதானமும் நடந்தன. தொடர்ந்து 

பஞ்சமூர்த்திகள் மூலஸ்தான திருக்கடங்கள் மற்றும் சுவாமி அம்பாள் விமான திருக்கடங்கள் புறப்பட்டது. 

இதையடுத்து அனைத்து விமானங்கள், ராஜ கோபுரங்கள், தஞ்சபுரீஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையடுத்து பக்தர் களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com