

தஞ்சாவூர்:
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 31-ந் தேதி வரை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டன.
10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் சில நாட்கள் செயல்பட்டது. பின்னர் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால் அந்த வகுப்புகளும் மூடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் அனைத்தும் 1 மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்டது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவ -மாணவிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு வகுப்புக்குள் அனுப்பப்பட்டனர்.
பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே கிருமிநாசினி, சோப் கொண்டு கைகழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. வகுப்பறையில் இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் முக கவசம் அணிந்து பாடங்களை கவனித்தனர். மதிய இடைவேளையில் கூட்டமாக அமர்ந்து உணவு சாப்பிட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போதும் கூட்டமாக செல்லா வண்ணம் இருக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல் அனைத்து ஆசிரிய -ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளார்களா என அந்தந்த பள்ளி நிர்வாகம் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.
ஏற்கனவே பள்ளிகளில் 15-18 வயது உடைய மாணவ-மாணவிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1 மாதத்திற்கு பிறகு நேரடியாக வகுப்புகள் நடைபெற்றதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றன.