

தஞ்சாவூர்:
கொரோனா ஊரடங்கு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் முகாம் தடை செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களின் மனுக்களை போட்டு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தஞ்சை அருகே உள்ள புதுகரியபட்டியை சேர்ந்த பொதுமக்கள் பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா சானூரப்பட்டி பஞ்சாயத்தில்
அய்யனார் கோவில் அமைந்துள்ளது. காலங்காலமாக அய்யனாரை வழிபட்டு வருகிறோம்.
பல்வேறு இடங்களில் இருந்து அய்யனார் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கோவிலுக்கு அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே உடனடியாக ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.