

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி வாணக்காரத் தெருவில் மாநகராட்சி 31-&வது வார்டு பா.ஜனதா வேட்பாளர் ஜெய்சதீசை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இது சவால் நிறைந்த தேர்தல். செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆர்வமாகக் கூடி வருவது மட்டுமல்லாமல், பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முனைப்புடன் பணியாற்றி உள்ளனர். எனவே, இந்தத் தேர்தல் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் இந்தத் தேர்தலை சந்தித்து வருகிறது.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு, திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வெகுமதி உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் நிறைவேற்றி வருகிறார்.
தஞ்சாவூர் மாநகரில் பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்பாட்டு பணிக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவுக்குப் பணிகள் சிறப்பாக நடைபெறவில்லை. இதை சரி செய்யும் வகையில் மாமன்றத்தை அலங்கரிக்க வேண்டுமானால், பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்.
உதயநிதிஸ்டாலின் தான் ஒரு எம்.எல்.ஏ என்பதை உணர வேண்டும். தஞ்சாவூரில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகைக் கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சென்னையில் பா.ஜனதா அலுவலகம் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பண்ணவயல் இளங்கோ, செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், 31-வது வேட்பாளர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பொன் ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். அப்போது தெருவில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார்.