

மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்கலம் பகுதியில் தஞ்சை-விக்கிரவாண்டி நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. உதாரமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்காக வெண்ணாற்றில் பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
பாலம் அமைக்கப்படுதால் 20& க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தஞ்சை உள்பட பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி கிராமமக்கள் சாலையை கடந்து செல்ல சர்வீஸ் சாலை அமைத்து தரும்படி பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை சர்வீஸ் சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் நெடுஞ்சாலைதுறையால் எடுக்கப்படவில்லை. அரசு கிராமமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து கொத்தங்குடி ஊராட்சிமன்ற தலைவர் பழனி கூறும்போது,
களஞ்சேரியில் பாலத்தில் இருந்து உதாரமங்கலம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலை காந்தாவனம், கோட்டூர், கோவத்தகுடி, எடக்குடி, சாத்தனூர் வெண்ணுகுடி, கொத்தங்குடி உதாரமங்கலம், உள்பட பல கிராம மக்கள் தஞ்சை உள்பட பிற பகுதிகளுக்கு செல்ல களஞ்சேரி, தஞ்சை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வெண்ணாற்றில் பாலம் அமைக்கப்படுவதால் கிராமமக்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆனால் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் இதுவரை உதாரமங்கலம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.