மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது-மணியரசன்

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்று மணியரசன் கூறினார்.
காவிரி அம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கரிகாலன் சிலை அருகில் முழக்கம்
காவிரி அம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கரிகாலன் சிலை அருகில் முழக்கம்
Published on

பூதலூர்:

காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் 3-ம் ஆண்டாக 

கரிகாற்சோழனுக்கு நன்றி பொங்கல்விழா கல்லணையில் 

நடைபெற்றது. குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் 

தலைமையில் நடைபெற்ற விழாவில் கரிகால் சோழன் சிலை, 

ஆர்த்தர் காட்டன், காவிரி அம்மன் சிலைக்கு மாலை அணிவித்து 

படையலிட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

கரிகால் சோழன் சிலை முன்பு தமிழர்கள் 

தாழ்வு மனப்பான்மையை விட்டு அவரது 

தன்மானம் காப்போம், காவிரியை மீட்போம், 

காவிரியை பிச்சை போடுவது இல்லை, 

பிச்சை கேட்பதில்லை, கர்நாடகா போடும் பிச்சை அல்ல, 

தன்னுரிமை காப்போம் காவிரியை காப்போம் 

என கரிகால் சோழன் பெருமைகளை சொல்லியும் 

நன்றி கூறும் விதமாக முழக்கமிட்டனர்.

இதில் காவிரி ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் 

மணிமொழியன், தஞ்சை மாவட்ட தமிழ் 

தேசிய பேரியக்க செயலாளர் வைகறை, 

தலைமை செயற்குழு உறுப்பினர் பழராஜேந்திரன், 

பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன், 

விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காவிரி உரிமை மீட்புக் குழு 

ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் 

பேசுகையில் கல்லணையை கட்டிய 

கரிகால் சோழனுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

இந்த விழாவை 3-வது ஆண்டாக கொரோனா 

விதிமுறைக்கு கட்டுப்பட்டு கொண்டாடுகிறோம். 

அடுத்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாட 

தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். 

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட 

அனுமதி கிடைத்து விட்டது என்று கூறுகிறது. 

மேகதாதுவில்அணை கட்டினால் தமிழ்நாட்டிற்க்கு 

ஒரு சொட்டு கூட தண்ணீர் வராது. 

இதை தமிழக முதல்வர் எதிர்த்து குரல் 

கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே கபினி, கிருஷ்ணராஜசாகர், 

ஹேமாவதி அணையைக் கட்டி தமிழகத்திற்கு 

வர வேண்டிய தண்ணீரை தடுத்து விட்டனர். 

கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் 

கட்சியினர் 20 ஆயிரம் பேரை திரட்டிக் கொண்டு 

அணையை கட்ட நடைபயணம், பேரணி என செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரும், 

தற்போது எதிர்கட்சி தலைவருமாகிய 

எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலிருந்து 

மேட்டூர் அணையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் 

கொண்டு செல்வதற்கு கால்வாய் வெட்டுவதற்கு 

ஆணை வழங்கினார். 

தற்போது கர்நாடகாவில் அணை கட்டியே தீருவோம் 

என கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 

எதிர்க்கட்சியாக இருந்து ஒரு எதிர்ப்பு கூட 

தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. 

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் 

ஒரு சொட்டு தண்ணீர் கூட நமக்கு கிடைக்காது.

தமிழக விவசாயிகள் அரசியல் அனாதையாக்கப்பட்டு 

உள்ளோம்.இந்த நிலை நீங்க வேண்டும் என்றால் 

உழவர்கள் ஆகிய நாம் ஒன்று சேர வேண்டும் என்று 

மணியரசன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com