தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி
தஞ்சை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி
Published on

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம்.

இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்-பிடிக்கப்படுகிறது.

அதன்படி இன்று குருத்தோலை ஞாயிறு திருநாள் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்றது.

தஞ்சை  திரு இருதய பேராலயத்தில் காலையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் வியாகுலமாதா ஆலய வளாகத்தில் இருந்து குருத்தோலை பவனி திரு இருதய பேராலயம் நோக்கி வந்தது.

இதையடுத்து மறைமாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் குருத்து ஞாயிறு வழிபாடு நடந்தது. இந்த வழிப்பாட்டில்  பேராலய பங்கு தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகரன் அடிகளார், உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர், திருத்தொண்டர் பிரவீன் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணை தலைவர் வின்சன்ட் தலைமையில் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் இயேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகருக்கு வருகை தந்த போது அவரை அந்த நாட்டு மக்கள் ஒலிவ மரத்தின் இலைகளுடன் வரவேற்பு அளித்ததை நினைவுகூறும் விதமாக குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடைபெற்றது.

பூண்டி மாதா மக்கள் மன்றத்திலிருந்து தொடங்கிய பவனியை பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். தென்னங் குருத்தோலைகளை ஏந்தியவாறு பேராலய அதிபர் மற்றும் அருட்தந்தையர்கள் நடந்து வந்தனர். திரளாக பக்தர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வந்தனர். குருத்தோலை பவனி பேராலயத்தை அடைந்ததும் பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

இதில் துணைஅதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குநர் சாம்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம், உதவி பங்குத் தந்தையர்கள் ஜான்சன், இனிகோ ஆகியோர் கலந்து கொண்டனர். புனிதம் செய்யப்பட்ட குருத்தோலைகளை பக்தர்கள் சிலுவை வடிவில் செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

நாளை முதல் 13-ந் தேதி வரை தேவாலயங்களில் சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் நடைபெறும். 14-ந் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு தனது சீடர்களுடன் போஜனம் பண்ணுவார். சீடரின் கால்களை கழுவுவார்.

இதனை நினைவு கூறும் வகையில் கத்தோலிக்க திருச்சபைகளில் கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சாதாரண மனிதர்களின் காலை கழுவும் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து 15-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. அன்று மும்மணி தியான ஆராதனை நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com