

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று நடந்த திருமண விழாவில் சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது அவர் பேசியதாவது
எம்.ஜி.ஆர் , ஜெயலலிதாவின் வழிவந்த தொண்டர்களின் இல்ல மண விழாக்களில் கலந்து கொள்வது சந்தோஷத்தை அளிக்கிறது. மணமக்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசி கண்டிப்பாக உண்டு. கணவன்- மனைவி உறவு என்பது உப்பைப் போல இருக்க வேண்டும்.
கூடினாலும், குறைந்தாலும் சாப்பிட முடியாது. ஒரு குடும்பத்தில் அதிகாரம் ஆட்சி செலுத்தினால் அங்கு சந்தோசம் தங்காது. அன்பின் பகிர்தலே ஆனந்தத்தின் அடிப்படை என்பதை என்னாலும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஈகோ, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறையான உணர்வுகளை கணவன் -மனைவி இருவர்கிடையில் அனுமதிக்கக் கூடாது.
ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள். உயர உயர அன்பின் நெருக்கம் அதிகரிக்கும். நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் -மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒருவரின் வார்த்தைக்கு மற்றொருவர் மதிப்பு அளிக்க வேண்டும்.
கழகம் ஒன்றுபட வேண்டும், வென்று காட்டிட வேண்டும் என்று ஏங்கி தவிக்கின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அ.தி.மு.க எத்தனையோ உண்மையான தொண்டர்களின் தியாகத்தில் உருவான ஒரு இயக்கம். எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது.
இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இயக்கம் எத்தனையோ சோதனை கட்டங்களை எல்லாம் கடந்து வந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மீண்டும் ஒரு சோதனையான கால கட்டம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் எவ்வாறு மீண்டு வந்ததோ அதேபோன்று தற்போதும் புதுப்பொலிவு பெறும் என்ற உன்னத நிலையை அடையும். தொண்டர்கள் கை காட்டும் வரை நிர்வாகிகள் நிலைக்கலாம்.
ஆனால் அந்த கடைக்கோடி தொண்டன் நிமிர்ந்தால் தான் கழகம் நிமிரும். கொடி பிடிக்கும் தன்னலமற்ற தொண்டர்கள் நம்மோடு இருக்கும் இந்த சூழலில் நம் கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும் செருக்கோடு தலை நிமிரும். இந்த உன்னத நிலையை அடைய நானே காரணம் ஆவேன். அதுவரை ஓயவே மாட்டேன்.
மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சியை கொண்டு வருவோம். கழகத்தை காப்பாற்றி மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்கிட உகந்த நேரம் வந்துவிட்டது. அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு குடைக்குள் கொண்டு வந்து பேரியக்கமாக உருவாக்குகின்ற உயர்ந்த பணியில் நாம் ஈடுபட்டு வரும் இந்த வேளையில் அனைவரும் ஒரே புள்ளியில் பயணித்து பொறுமை காப்பதே நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வேண்டுமென்றால் விதையை விதைத்து நீர் ஊற்றி சில காலம் பொறுமை காக்க வேண்டும். அதுபோல நம் செயல்கள் வெற்றி பெற வேண்டுமானால் பொறுமையுடன் கூடிய முயற்சி வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.