சாலையோரத்தில் உள்ள ஆலமரத்தின் அருகில் மின்கம்பமும், விழுதுகளிடையே உயரழுத்த மின்கம்பிகளும் செல்கின்றன.
சாலையோரத்தில் உள்ள ஆலமரத்தின் அருகில் மின்கம்பமும், விழுதுகளிடையே உயரழுத்த மின்கம்பிகளும் செல்கின்றன.

ஆலமர விழுதுகளிடையே செல்லும் உயர்அழுத்த மின்கம்பிகள்

திருவையாறு அருகே ஆலமர விழுதுகளிடையே செல்லும் உயர்அழுத்த மின்கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Published on

திருவையாறு:

திருவையாறு அருகே குடந்தை மெயின்சாலையில் ராயம்பேட்டை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மெயின்சாலையின் தென்புறத்தில் கிழக்கு மேற்காக உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லுகின்றன. சாலையின் குறுக்கே தென்வடலாகவும் இவ்வுயரழுத்தமின் கம்பிகள் செல்லுகின்றன.

இந்நிலையில், சாலையின் தென்புற ஓரத்தில் வளர்ந்துள்ள ஓர் ஆலமரத்தின் விழுதுகளிடையே இவ்உயரழுத்த மின்கம்பிகள் செல்லுவதால், நீர்ப்பசையுள்ள விழுதுகளில் உயரழுத்த மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது.

இதனால் அவ்விடத்தில் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மீதும், அருகருகே உள்ள திருமண மண்டபங்களுக்கு சென்று வருபவர்கள் மீதும், சாலையோரம் நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீதும் விழுதுகள் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், அதே சாரியில் உள்ள அடர்ந்த கிளைகளையுடைய வேப்ப மரம், வாகை மரம் மற்றும் அரசமரம் ஆகிய மரங்களின் வளைந்த கிளைகளுக்கு கீழே அவற்றை உரசியவாறு உயரழுத்த மின்கம்பிகள் செல்வதால் மழைகாலங்களில் மரக்கிளைகள் முறிந்தாலும் மரத்தின் ஈரத்தினாலும் மனிதர்களின் மீதும் பிற கால்நடைகள் உள்ளிட்ட உயினங்களின் மீதும் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

வரும் காலங்களில் சாலையின் இருபுறங்களும் அகலப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க ஏதுவாக உள்ள உயரழுத்த மின்கம்பிகளை மரக்கிளைகளிடையேயும் போக்குவரத்து சாலையின் குறுக்கேயும் செல்லாதவாறு உடனடியாக உரிய நடைமுறைகளை மேற்கொண்டு மின்பாதையினை மாற்றியமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயம்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com