

பூதலூர்:
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் ஆனந்த காவேரி வாய்க்கால் வடக்கு கரையில் ஸ்ரீ சந்திவீர ஐயனார் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த கோவிலில் பூர்ணா புஷ்கலா சமேத சந்திவீர அய்யனார், விநாயகர், முருகன் சாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இக்கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் அருகில் யாகசாலை அமைக்கப்பட்டு காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து நான்குகால பூஜைகள் செய்யப்பட்டன. நான்கு கால பூஜைகள் நிறைவு பெற்ற பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களைஆச்சாரியார்கள் சுமந்து, நாதஸ்வர இன்னிசை முழங்க கோவில் வலம் வந்தனர்.
பின்னர் புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலினுள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விருதுள்ளார்கள், குலதெய்வ வழிபாட்டுகாரர்கள், கோவில் பத்து பூதலூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
திரளான மக்கள் கும்பாபிஷேகத்தை பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கினர்.