வயல்களுக்குள் புகுந்த வி‌ஷ வண்டுகளை படத்தில் காணலாம்
வயல்களுக்குள் புகுந்த வி‌ஷ வண்டுகளை படத்தில் காணலாம்

எடப்பாடி அருகே வயல்களுக்குள் புகுந்த பயங்கர வி‌ஷ வண்டுகள்- பயிர்களை தாக்கி சேதம்

மிகுந்த அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வண்டுகளை அளிப்பது குறித்து நேரிடை செயல் விளக்கம் பயிற்சி விரைவில் காவிரி வடிநில பகுதியில் நடைபெறும்.
Published on

எடப்பாடி:

சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசன பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு பயிர்களை ஆயிரக்கணக்கான மெழுகு வண்டுகள் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வகை வண்டுகள் மரவள்ளி, கரும்பு, பாக்கு உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இரவு தொடங்கும் நேரத்தில் அதிக எண்ணிக்கையில் படையெடுக்கும் இவ்வகை வண்டுகள் மழைக் காலங்களில் பரவலாக வெளிவர தொடங்கும்.

ஜூன் வண்டுகள் என்று அழைக்கப்படும் இவ்வகை வண்டுகள் பெரும்பகுதி சேகரிக்கப்பட்ட தொழு உரக் குவியல்கள், சிறு குன்றுகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இனப்பெருக்கம் அடைந்து மிக அதிக எண்ணிக்கையிலான படைகளாக உருவாகி பயிர்களைத் தாக்கிடும். இதனால் பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்து, மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து பில்லுக்குறிச்சியை அடுத்த காசிகாடு பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி கந்தசாமி கூறுகையில், தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடிகள் நன்கு செழித்து வளரத் தொடங்கி உள்ள நிலையில் வண்டுகள் பெரும் படையாக வந்து மரவள்ளிக்கிழங்கு பயிர்களை தாக்கி சேதப்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சந்தியூர் வேளாண் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ரவி ஆகியோர் தெரிவித்ததாவது:-

குறிப்பாக இந்த வண்டுகள் பயிர்களின் வேரையும், இலைகளையும் தாக்கி அழிக்கக்கூடியது. இவற்றைக் கட்டுப்படுத்த இரவு தொடங்கும் நேரங்களில் வயல்வெளிகளில் மிக அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை அமைத்து, அவற்றின் முன் பெரிய அளவிலான விரிப்புகளை அமைத்து, அங்கு பறந்து வந்து விழும் அதிக எண்ணிக்கையிலான வண்டுகளை சேகரித்து பூச்சிக்கொல்லி மருந்து கரைசலில் இட்டு அழித்துவிடவேண்டும்.

மிகுந்த அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வண்டுகளை அளிப்பது குறித்து நேரிடை செயல் விளக்கம் பயிற்சி விரைவில் காவிரி வடிநில பகுதியில் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com