கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

இயற்கை வளங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
Published on

தென்காசி:

இயற்கை வளங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார். கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் வரவேற்றார்.

அப்போது தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குவாரிகள் என்ற பெயரில் நமது கனிம வளங்கள் சூறையாடப்பட்டு சுமார் 250&க்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் நாளொன்றுக்கு 5000 டன் வரை இரவு&பகலாக கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.

இதனால் விவசாய தொழில் நாசமடைவதோடு, இயற்கையும் நிரந்தர ஊனமாகி மக்களின் வாழ்நிலையும், எதிர்காலமும் பாழாகிக் கொண்டிருக்கிறது.

கடையம் ஒன்றியத்தில் விதிமுறைகளை மீறி கல், மணல் அள்ளும் கல்குவாரிகளின் செயல்பாட்டை நிறுத்தவும், உள் மாநில தேவைக்கு அல்லாமல் கேரளாவிற்கு கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த ராட்சத கனரக வாகனங்களால் மக்கள் நிதியில் போடப்பட்ட சாலைகள், குடிநீர் குழாய்கள் சேதமடைவதோடு கடையம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு, மரங்கள் சேதம் ஆகியவை ஏற்படுவதால் கனரக வாகனங்கள் போக்குவரத்தை தடுத்து நிறுத்தவும், இதன் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதனை கண்டித்து கடையம் யூனியன் அலுவலகம் முன்பு பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அவ்வாறு தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்கவும், இந்த தீர்மானங்களை அந்தந்த பஞ்சாயத்துகளில் நடைபெறும் கிராம சபை கூட்ட பதிவுகளில் சேர்க்கவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com