கடையநல்லூரில் பெண் தவறவிட்ட தங்க சங்கிலியை திருடியவர் கைது

கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பெட்ரோல் பங்கில் தங்க சங்கிலியை தவறவிட்டார். அதனை ஒரு வாலிபர் திருடி வைத்துக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கடையநல்லூர்:

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வருபவர் கலைபிரியா. இவர் கடந்த மாதம் 25-ந்தேதி அவரது சொந்த ஊரான கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டிக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக வந்துள்ளார். 

அப்போது அவரது தந்தையின் மோட்டார் சைக்கிளில் அச்சம்பட்டியில் இருந்து கடையநல்லூர் சென்று கொண்டிருந்த போது அவரது தங்க சங்கிலி சாலையில் தவறி விழுந்து தொலைந்து விட்டதாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் கலைபிரியா புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி விசாரணை மேற்கொண்டு கலைபிரியா மோட்டார் சைக்கிளில்  சென்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை சோதனை செய்து பார்த்ததில் அவரது தங்கச்சங்கிலி அச்சம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் தவறி விழுந்ததையும், அதை ஒரு வாலிபர் எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பாலமார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ்(வயது 26) என்பது தெரியவந்தது. 

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைக்காமல் திருட முயற்சி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்கச்சங்கிலி மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com