புளியரை சோதனை சாவடி வழியாக கனிமவளம் கடத்தலை தடுக்க வேண்டும்- முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது. அதனை தடுக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கடையம்:

தென்காசி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி அருணன் தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வந்தது. தற்போதும் அதிகாரிகள் உதவியுடன் அதிக அளவில் கடத்தல் நடக்கிறது. 

நாள்தோறும் தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டும் 200 முதல் 300 கனரக வாகனங்களில் லாரிக்கு 50 டன் வீதம் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

அனுமதி சீட்டில் தானாக அழியும் மை மூலம் எழுதப்பட்டு மறுநாள் தேதியை மாற்றி இரவு, பகலாக கனிம வளங்கள் எடுத்து செல்லப்படுகிறது. 

இதற்கு அனைத்து அதிகாரி களும் மாதந்தோறும் கணிசமான அளவு லஞ்சம் பெறுவதால் அந்த வாகனங்களை யாரும் மறித்து சோதனை செய்வதில்லை.

இந்த வாகனங்கள் தமிழகத்துக்கு திரும்பும்போது அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து ஆங்காங்கே சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றன. 

அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமாவதுடன், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் திட்ட குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

வாகனங்களில் 2 யூனிட் டுக்கு மேல் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். பெர்மிட் படிவங்களை பெற நடைமுறையை கடுமையாக்கி, பெர்மிட் வழங்குவதை கணினி மயமாக்க வேண்டும். 

சோதனை சாவடிகளில் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com