

ஆலங்குளம்:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, 2009-2010-ம் நிதியாண்டில் தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 9 ஆண்டுகளாக நிலுவையில் வைத்து விட்டு அ.தி.மு.க. அரசு கடந்த 2019-20-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடிட பணியை ஆரம்பித்தது.
கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 6 மாதங்களாகியும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் திறக்கப்படாமல் இருக்கிறது. அதனை விரைந்து திறக்க வேண்டும்.
ஆலங்குளத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைத்திட அரசாணை வழங்கப்பட்டுவிட்டது. குற்றவியல் நீதிமன்றமும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் ஒரே இடத்தில் அமைவதற்கு வாடகை கட்டிடம் பார்க்கப்பட்டுள்ளது.
ஆலங்குளத்தில் அரசு கலைக்கல்லூரி அமையும் இடம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைத்திட நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, குற்றாலம் முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார் பாண்டியன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், அரசு ஒப்பந்ததாரர் மாரித்துரை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.