

கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை பழமையும் பாரம்பரியமும் வாய்ந்தது. அகத்தியர், தேரையர் முதலிய சித்தர்களால் பூஜிக்கப்பட்ட பெருமையும் வாய்ந்ததாகும்.
பழமை வாய்ந்த தோரண மலையில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் இன்று காலைநடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தமிழ் புத்தாண்டுக்கான பூஜைகள் தொடங்கியது.
மேலும் தோரண மலையில் மேலுள்ள மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சுனையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு தோரண மலை அடிவாரத்தில் வைத்து உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபா ராதனைகள் நடைபெற்றது. தென்காசி சிவ பூத கண நாதர் வாத்தியக் குழுவினர் இன்னிசையுடன் பூஜைகள் நடைபெற்றது.
உலகின் உணவிற்கு ஆதார தொழிலான விவசாயத்திற்காக பயன்படுத்-தப்படும் கருவிகள் ஏர்கலப்பை ,நீர் இறைக்கும் கூனை மற்றும் மரம் அடிக்கும் கருவி, மாட்டு வண்டி உள்ளிட்ட வேளாண் கருவிகளை வைத்து பூஜைகள் நடைபெற்றது.சிறந்த விவசாயிகள் மற்றும் சமூக சேவைகளுக்கான தோரண மலையான் விருதும் வழங்கப்பட்டது .
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பள்ளியில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட புது திருமண தம்பதிகள் நாடு செழிக்கவும், விவசாயம் மேம்படவும் பொருளாதாரம் செழிக்கவும், தேசத்தில் அமைதி நிலவவும் வேண்டி 50 பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தோரணமலை கோவில் திருப்பணிகளை தொடர்ச்சியாக செய்து வரும் ஆசிரியர் ஆதிநாராயணன் குடும்பத்திற்கு பக்தர்களும் பொதுமக்களும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.