

வீ. கே. புதூர்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் மூன்றாவது ஆண்டு தென்னிந்திய அளவிலான கபடி போட்டி நடத்துவது தொடர்பாக கீழப்பாவூர் விளையாட்டு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிறுவனர் பி.ஆர்.கே. அருண் தலைமை தாங்கினார். அன்பரசு முன்னிலை வகித்தார்.
நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்தையா, வீரன் என்ற சந்தன முத்து, முருகன், பொன்னுத்துரை, சுரேஷ், வைகுண்டராஜ், ஈஸ்வரன், வை.சுரேஷ், கண்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழப்பாவூரில் தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டியினை வருகிற ஏப்ரல் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடத்தவும், ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.75,000, இரண்டாவது பரிசு ரூ.50,000, 3 மற்றும் 4-வது பரிசுகளாக தலா 25,000 வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ. 50 ஆயிரம், 2-வது பரிசு ரூ. 25,000, 3 மற்றும் 4-வது பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. மேலும் போட்டி வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு அனைத்தையும் கீழப்பாவூர் விளையாட்டு குழுவே ஏற்கும் எனவும் தெரிவித்தனர்.
இப்போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அனைத்து கட்சி பிரமுகர்கள் என பலரையும் அழைத்து கபடி போட்டிகள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.