

செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது.
மாவட்டத்தின் மிக சிறிய அணையான குண்டாறு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இங்குள்ள காட்டு பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இவை அவ்வப்போது காட்டு பகுதியில் இருந்து இறங்கி வந்து நாய்களை தூக்கி சென்றது.
சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்ததால் அப்பகுதியில் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை குண்டாறு அணைக்கு செல்லும் வழியில் நரிபொத்தை என்ற இடத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு அதன் உரிமையாளரான சாமி (வயது45) என்பவர் சென்றார்.
அப்போது அவரது தொழுவத்தில் இருந்த 6 மாத கன்று குட்டி இறந்த நிலையில் கிடந்தது. அதன் உடலில் சிறுத்தையின் கால் நகங்கள் பதிந்து இருந்ததாக தெரிகிறது.
உடனே அவர் செங் கோட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விரைந்து சென்று கன்று குட்டியின் உடலை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் மீண்டும் சிறுத்தை தான் காட்டு பகுதியில் இருந்து வந்து கன்று குட்டியை கடித்து சென்று இருக்குமா என்று மக்கள் பீதி அடைந்துள்ளனர்.