

சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி கிராமத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் தரமான விதைகளை தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
மாணவி ரித்திகா பிரியதர்ஷினி தரமான விதைகளை தேர்வு செய்வது குறித்து செயல் விளக்க பயிற்சி இணை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். ஒரு வாளியில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு முட்டையை போடவேண்டும்.
பின்னர் முட்டையின் வெள்ளை ஓடு பகுதி 2.5 சென்டிமீட்டர் தண்ணீரின் வெளியில் தெரியும் வரை உப்பை கலக்க வேண்டும். முட்டை வெளியே தெரிந்த பின்பு நெல் விதைகளை தண்ணீரில் இட வேண்டும். இட்டவுடன் நல்ல தரமான விதைகள் அனைத்தும் தண்ணீரின் கீழ்ப்பகுதியில் சென்றுவிடும்.
பூச்சிகளால் தாக்கப்பட்ட விதைகள் மற்றும் முதிர்ச்சியற்ற விதைகள் தண்ணீரில் மிதந்து கொண்டே இருக்கும். மிதக்கின்ற விதைகளை அகற்றிய பின்னர் தரமான விதைகளை 2 முதல் 3 முறை நல்ல தண்ணீரில் கழுவுவதால் உப்பு பதிவுகளை அகற்றலாம். இவ்வாறு செய்யாவிட்டால் விதைகள் முளைக்கும் திறன் பாதிக்கப்படும்.
பிளாஸ்டிக் பையில் பசுஞ்சாணம் மற்றும் நெய் கலந்து 3 நாட்கள் வைத்திருக்க வேண்டும். அதே நாளில் மற்றொரு பீப்பாயில் மாட்டுச் சாணம், பசும்பால், பசுந்தயிர் கலந்து வைக்க வேண்டும். மூன்றாம் நாளில் பீப்பாயில் உள்ள கலவையை நன்கு கலக்கி திறந்த நிலையில் ஏழு நாட்கள் வைத்திருக்க வேண்டும்.
மரக்குச்சியை கொண்டு இந்த கலவையை ஒரு நாளுக்கு இரண்டு முறை கலக்கி விட வேண்டும். பீப்பாயின் வாயை காடா துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். 7 நாட்களுக்குப் பிறகு இந்த கலவையை காடா துணி கொண்டு வடிகட்டி பீப்பாயில் மூடி வைக்க வேண்டும். இதனால் 10 லிட்டர் பஞ்சகாவ்யா கிடைக்கும்.
இந்த செயல் விளக்கங்களை மாணவி ரித்திகா பிரியதர்ஷினி, அனகா ஆகியோர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.