

திண்டுக்கல்:
திண்டுக்கல் சோலைஹால் பின்புறம் மார்க்கெட் குமரன்தெருவில் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவதானியங்கள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த சிலை சற்று சேதமடைந்து வந்ததால் புதிய சிலை நிறுவ அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி அம்மனின் கல்சிலை வடிவமைக்கப்பட்டு கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆனால் பழைய அம்மன் சிலை கருவறைக்கு கீழே மண்ணில் வைத்து மறைக்கப்பட்டது. ஆனால் பழைய அம்மன் சிலைக்கு முறையான வழிபாடுகள் செய்யாததால் இப்பகுதியில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த சிலை மீண்டும் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது இந்த கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க உள்ளதால் பழைய அம்மன் சிலையை மீண்டும் வெளியே கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அம்மன் சிலை வெளியில் எடுக்கப்பட்டது.
அந்த சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்து பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தால் மெய்சிலிர்த்தனர். இந்த சிலையை தனி பீடத்தில் வைத்து தொடர்ந்து பூஜைகள் செய்யப்போவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
12 வருடங்களுக்குப் பிறகு அம்மன் சிலை வெளியே கொண்டுவரப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஏராளமானோர் அங்கு சென்று அம்மனை வழிபட்டு வருகின்றனர்.