

கோவை:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சரவணகுமார் (வயது 26). பால் வியாபாரி.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 4 மாதங்களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். காதலர்கள் நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
இதன் காரணமாக 2 பேரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடிப்பது என முடிவு செய்தனர். கடந்த 4-ந்தேதி காதலர்கள் வீட்டை வீட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் மாயமான தங்களது மகளை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வந்தனர். அவர்களது செல்போன் டவரை போலீசார் ஆய்வு செய்தது. அது கொடைக்கானலை காட்டியது.
இதனையடுத்து போலீசார் கொடைக்கானலுக்கு விரைந்து சென்று சரவணகுமாருடன் தங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இளம்பெண் தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
காதலி தன்னை பிரிந்து சென்றதால் சரவணகுமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சரவணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.