நெல்லை அருகே பழிக்குப்பழியாக வாலிபர் கடத்தி தலை துண்டித்து படுகொலை

ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே பழிக்குப்பழியாக வாலிபர் கடத்தி தலை துண்டித்து படுகொலை
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழத்திடியூரை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24).

இவர் நேற்று இரவு 9 மணி அளவில் பணகுடியில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தெற்கு வள்ளியூர் 4 வழிச்சாலை அருகே உள்ள பிலாக்கொட்டை பாறை பகுதியில் வந்த போது எதிரே வந்த ஒரு கார் அவர் மீது மோதியது.

இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக தாக்கி, அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மட்டும் சாலையில் கிடந்தது.

எனவே அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கார்த்திக்கை மர்ம கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.

இந்நிலையில் ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தலைதுண்டிக்கப்பட்ட உடலை கைப்பற்றினர். அங்கிருந்து சற்று தொலைவில் துண்டிக்கப்பட்ட தலையும் கிடந்தது. அதனை வைத்து நடத்திய தொடர் விசாரணையில் அவர் நேற்று காரில் கடத்தி செல்லப்பட்ட கார்த்திக் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பேட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார் உரிமையாளர் பிச்சைராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சியில் கார்த்திக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனேவே பிச்சை ராஜ் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com