

சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், வெங்கடேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவினர் மகனான ஹரீஷ் (23) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்.
அப்போது அந்த பெண்ணுக்கும் , வெங்கடேஷூக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் அந்த பெண்ணை கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு வெங்கடேஷ் வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் ஹரீஷ் அவரை சரமாரியாக கைகளாலும், கட்டையாலும் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிறிது நேரத்தில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.