விளாத்திகுளம் அருகே வாலிபரை கொன்ற சிறுவன் கைது

சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
விளாத்திகுளம் அருகே வாலிபரை கொன்ற சிறுவன் கைது
Published on

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெரு கேசவன் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 32). கூலித்தொழிலாளி.

இவரும் அதேபகுதியை சேர்ந்த இவரது உறவினரான 16 வயது சிறுவனும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் அடிக்கடி மது குடித்துள்ளதால் கார்த்திக்ராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு 2 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு கார்த்திக் ராஜ் தனது வீட்டிற்கு மீரான் பாளையம் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த சிறுவன், கார்த்திக்ராஜிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திக்ராஜின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைதடுமாறிய கார்த்திக் ராஜ் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் சென்று தப்ப முயன்றுள்ளார்.

எனினும் அந்த சிறுவனும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிவிட்டு கார்த்திக் ராஜை அரிவாளால் பலமுறை வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் போலீசார் கார்த்திக் ராஜை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் கார்த்திக் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட கார்த்திக்ராஜிக்கு லதா (27) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com