

திருவள்ளூர்:
கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே குடிசை வீடு அமைத்து கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் கார்த்திக் (வயது28).இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இவரது வீட்டை சுற்றி வசித்து வரும் சிலர் இவரை அந்த இடத்தை விட்டு காலி செய்ய வற்புறுத்தி நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து கடந்த மாதம் கார்த்திக் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனுவை அளித்து இருந்தார்.
இதுபற்றி இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே கார்த்திக்கின் வீட்டை சுற்றி சிலர் பள்ளம் தோண்டி வைத்தனர். இதனால் கார்த்திக்கின் குடும்பத்தினர் வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை கார்த்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்றபடி கார்த்திக் திடீரென தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் கார்த்திகை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.