திருப்பூரில் மோட்டார் சைக்கிளில் வந்த இளம்பெண் காரில் கடத்தல்

பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் காதலியை காதலன் கடத்தி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தல்
கடத்தல்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மருதாச்சலபுரம் பகுதியை சேர்ந்தவர் உமாஸ்ரீ (வயது 24). இவர் அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது நிறுவனம்  அருகே உள்ள மற்றொரு பனியன் கம்பெனியில் அவிநாசியை சேர்ந்த  மோகன் (30) என்பவர்  பணியாற்றி வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதையறிந்த உமாஸ்ரீயின் பெற்றோர்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உமாஸ்ரீ, மோகனுடன் பழகுவதையும், பேசுவதையும் நிறுத்தி  கொண்டார்.

இந்தநிலையில் உமாஸ்ரீ  அங்கேரிபாளையம்  ரோடு, காதர் லே அவுட் பகுதியில்  ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த  மோகன், திடீரென  உமாஸ்ரீயை  வழிமறித்ததுடன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை அலாக்காக  காரில்  தூக்கிப்போட்டு கடத்தி சென்றார். உமாஸ்ரீ சத்தம் போடவே  அப்பகுதி பொதுமக்கள்  காப்பாற்ற முயன்றனர். அதற்குள்  மோகன்  உமாஸ்ரீயை காரில் கடத்தி சென்று விட்டார்.

உடனே இது குறித்து பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும்  மோகன் இருக்கும் இடத்தை கண்டறிய அவரது செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது அவர் ஈரோடு அருகே சென்று  கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்  ஈரோடுக்கு காரில் விரைந்தனர். மேலும் அங்குள்ள போலீசாரையும் தொடர்பு கொண்டு  தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே மோகன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அவர் உமாஸ்ரீயை எங்கு கடத்தி சென்றார் என்று தெரியவில்லை.  திருமணம் செய்து கொள்வதற்காக  கடத்தி சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி உமாஸ்ரீயை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மோகன் இருக்கும் இடத்தை கண்டறிய அவரது நெருங்கிய நண்பர்கள் 2பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com