கோவையில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி

கோவையில் மதுபோதையில் போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி தீக்குளித்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை:

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது37). மின் மயானத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சிவக்குமார் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் பெட்ரோல் பாட்டிலுடன் போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். திடீரென போலீஸ் நிலையம் முன்பு வைத்து நீதி வேண்டும், நீதி வேண்டும் என கூறியபடி பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் சிவக்குமார் அங்கும் இங்குமாக ஓடினார். இதனை பார்த்த அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

பின்னர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது போலீசார் சிவக்குமாரிடம் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் குடிபோதையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் சிவக்குமார் மீது தற்கொலைக்கு முயற்சி செய்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com