திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்கு 117 வீடுகளை இடிக்க எதிர்ப்பு- பெண்கள் போராட்டம்

திருவொற்றியூரில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்கு 117 வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
போராட்டம்
Published on

திருவெற்றியூர்:

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் திருவொற்றியூர் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல அண்ணாமலை ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகிலேயே அண்ணாமலை ரெயில்வே கேட் இருப்பதால் கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்க ரெயில்வே துறை முடிவு செய்தது.

இதில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கேட்டின் அருகில் உள்ள 117 வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டது.

இதுதொடர்பாக அங்கு வசிப்பவர்களுக்கு ரெயில்வே நோட்டீசு வழங்கியது. இதனால் கடந்த 50 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்கள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட போலீசார், ரெயில்வே போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், ரெயில்வே அதிகாரிகள் வீடுகளை அகற்ற ஜே.சி.பி எந்திரங்களுடன் வந்தனர்.

இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீட்டை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசு முன்னாள் எம். எல். ஏ. கே. குப்பன், வார்டு கவுன்சிலர் கே.கார்த்திக் ஆகியோர் அங்குவந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் வீடுகளை இடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வீடுகளை அகற்றுவதற்கான தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com