கணவரின் தம்பி மகனை கொன்ற பெரியம்மா - குழந்தை அழகாக இருந்ததால் ஆத்திரம்

கறுப்பாக உள்ள தனது குழந்தைகளை யாரும் கண்டு கொள்ளாததால் கணவரின் தம்பி குழந்தையை தூக்கிச் சென்று தடுப்பணையில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தை பலி
குழந்தை பலி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்தவர் திம்மப்பா. இவருக்கு நாகேஷ், சுரேஷ் என 2 மகன்கள் உள்ளனர்.நாகேஷ் மனைவி லலிதம்மா.இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். சுரேஷ் மனைவி மோனிகா. இவர்களுக்கு நிகிதா (4), நிகில் (2) என மகள், மகன் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

நாகேஷ், லலிதம்மா தம்பதியின் குழந்தைகள் இருவரும் கறுப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சுரேஷ் மகள், மகன் இருவரும் சிகப்பாக அழகாக இருந்துள்ளனர்.

இவர்களது வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் சுரேஷ் மகன் நிகிலை கொஞ்சி விளையாடி வந்துள்ளனர். ஆனால் லலிதம்மா குழந்தைகளை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சுரேஷ் குழந்தைகள் மீது லலிதம்மாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை நிகிலை, லலிதம்மா தூக்கிச்சென்று அருகிலுள்ள தடுப்பணையில் வீசி உள்ளார். தண்ணீரில் மூழ்கி குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து லலிதம்மா ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று படுத்துக்கொண்டார். தூங்கிக்கொண்டிருந்த நிகில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த மோனிகா வீடு முழுவதும் சிறுவனை தேடினார். ஆனால் நிகில் கிடைக்கவில்லை.

இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் நிகிலை பல்வேறு இடங்களில் தேடினர். அவர்களுடன் சேர்ந்து லலிதம்மாவும் குழந்தையை தேடினார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் லலிதம்மா அதிகாலை நிகிலை தடுப்பணை வழியாக தூக்கிச் சென்றதாக தெரிவித்தார். அனைவரும் அலறி அடித்துக்கொண்டு தடுப்பணைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது குழந்தை நிகில் அங்கு தண்ணீரில் மிதந்து இறந்து கிடந்தான். இதுகுறித்து நல்லம்பள்ளி போலீசில் சுரேஷ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் யோகாந்த வழக்கு பதிவு செய்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தையை கொலை செய்த லலிதம்மாவை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நிகிலை மட்டும் கொஞ்சி விளையாடினர்.

என்னுடைய குழந்தைகள் கருப்பாக இருந்ததால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் நிகில் மீது எனக்கு ஆத்திரம் வந்தது. நாளாக நாளாக ஆத்திரம் கொலை வெறியாக மாறியது.

இதனால் நிகிலை தூக்கிச் சென்று தடுப்பணையில் வீசி கொலை செய்ததாக கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com