

நெல்லை:
நெல்லை சுத்தமல்லியை சேர்ந்தவர் வெயிலுமுத்து. இவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 30). இவர் இன்று காலை தனது 3 வயது மகனுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென பேச்சியம்மாள் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தன் மீதும், மகன் மீதும் ஊற்றினார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்களும், கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் பேச்சியம்மாளிடம் இருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். மேலும் அவர் மீதும், அவரது மகன் மீதும் தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் போலீசார் பேச்சியம்மாளிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு சொந்தமான வீடு சுத்தமல்லி பகுதியில் உள்ளது. அதை சுற்றி எனது உறவினர்களின் வீடு உள்ளது. நான் எனது வீட்டை வாடகைக்கு விட முயன்ற போது உறவினர்கள் தடுக்கிறார்கள். இது தொடர்பாக சுத்தமல்லி போலீசில் புகார் செய்தேன்.
விசாரணையின் போது போலீசார் என்னை அவதூறாக பேசுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று தான் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம், உங்கள் பிரச்சினை தொடர்பாக மனு எழுதி கலெக்டரிடம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதை விடுத்து விட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறானது என போலீசார் எச்சரித்ததோடு அறிவுரைகள் கூறி அனுப்பினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.