தாரமங்கலம் அருகே கணவர் கொலை செய்யப்பட்டதால் மனைவியும் தற்கொலை

கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே முத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகேசன். லாரி டிரைவர். இவரது முதல் மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சந்தியா இறந்து விட்டார். இதையடுத்து குழந்தைகளை கண்டு கொள்ளாமல் சிவகேசன் சுற்றி வந்தார்.

இதனால் சிவகேசனின் குழந்தைகளை அவரது தம்பி வெங்கடேசன் வளர்த்து வந்தார். இதற்கிடையே சிவகேசன் ராதா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். சிவகேசனின் தம்பி அந்த பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதையறிந்த சிவகேசன் தந்தை மணியிடம் சென்று தம்பிக்கு மட்டும் பணம் கொடுக்கிறாய், எனக்கு கொடுக்க மறுக்கிறாய் என்று கூறி தகராறு செய்தார்.

இதனை தட்டி கேட்டதால் சிவகேசனுக்கும், வெங்கடேசுக்கும் இடையே தகராறு ஏறபட்டது. இதில் இருவரும் ஒருவரையொருவர் மாறி, மாறி சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து வெங்கடேசன் அண்ணன் சிவகேசனை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவகேசனை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிககிச்சை அளித்தும் பலனின்றி சிவகேசன் நேற்று முன்தினம் இறந்தார்.

இதையடுத்து தொளசம்பட்டி போலீசார் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகேசனின் மனைவி ராதா கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் அழுதபடியே இருந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த ராதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் சிவகேசன் இறந்த நிலையில், வெங்கடேசனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சிவகேசனின் 2 குழந்தைகளும் பரிதவித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com