

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.
இதில் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு மே 16-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 15-ந்தேதி வரை 152 நாட்களுக்கு 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் அரசு உத்தரவிட்டது.
தண்ணீர் திறப்பின் மூலம் 5 கால்வாய்களில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற உள்ளது. இன்று காலை பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
அப்போது, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், நீர்ப்பாசனத் துறை மண்டல தலைமை பொறியாளர் முத்துச்சாமி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், பரம்பிக்குளம் செயற்பொறியாளர் நரேந்திரன், தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் உட்பட பலர் இருந்தனர்.
தண்ணீர் திறந்து வைத்த அமைச்சரிடம் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிகல் பரமசிவம், ஆழியாறு பாசன சங்க நிர்வாகி செந்தில் உட்பட விவசாயிகள் சார்பில் ஒட்டன்சத்திரத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர், விரைவில் முதல்வரின் கவனத்திற்கு விவசாயிகளின் கோரிக்கை கொண்டு செல்லப்படும் என்றார்.